சுண்ணாம்புச் சுவடுகள்.
--------------------
கழிந்த கோடையில்
அடித்த சுண்ணம்
பாசியினின்றும் சுவர்களைக்
காத்திருக்கவேண்டும்தான்
- அடுத்த கோடைவரையிலாவது.
நீர் ஊற்றி
வெம்மையேற்றும்
நூதன இயற்பியல் விதிகளோடு,
சுண்ணக்குவியல் கொதித்தது
குமிழிகளுடன்...
கருகருவென்றிருந்த
குதிரை மயிர்கட்டிய
தூரிகைகள் வெண்மையூறி
இற்றும் போயின,
பின் கட்டுச் சுவர் வண்ணம்
பூசி முடித்த போது.
தரையில் சுண்ணச் சூரியன்கள்
சிந்திக்கிடக்க,
வீட்டினுள் உஷ்ணம் கூடி
கண்கள் எரிய,
எங்கும் வெண்மை...
சுண்ணத்தின் நெடி
சோற்றிலும், நீரிலும்
அனைத்தையும் பொறுத்தது
சுவர்களைக் காக்க மட்டுமே.
எனக்கென்னவோ
அடர்மழையின் பின்
கற்களூடே படர்ந்து
சுவரேறும்
பாசப் படுகை
கவர்ந்திருக்கிறது
சுண்ணத்தைவிட..
பாசியும் மடியும்
மஞ்சளாய் உதிர்ந்து
இலையுதிர்காலத்தில்..
சுண்ணச் செதில்களோடு
நிர்வாணக் கற்கள்
வெறித்து நிற்கின்றன
கோடையில் அடுத்த
சுண்ணப்படுகை ஏறும்வரை
பாவம் சுவர் கற்கள்
வாழட்டும் அன்றுவரையெங்கிலும்.
அன்புடன்
ஸ்ரீமங்கை
No comments:
Post a Comment