xmlns:fb="http://ogp.me/ns/fb#"> Ennangalsudha எண்ணங்கள் சுதா: January 2012

Saturday, January 07, 2012

கணனிப்புரட்சியும் கொடையும்

மும்பையின் இந்த வருட ஜனவரி தட்ப வெப்பநிலை, உலகப் பருவகாலத்தின் கோட்டிக்காரத்தனத்தின் வெளிப்பாடு. இரவுகள் நடுங்க வைக்க, பகல்பொழுதுகள் வியர்க்க வைக்கின்றன. மக்கள் நெரிசல் குறைந்த லோக்கல் வண்டியில் பயணம் செய்வது அபூர்வமென்றால், அதிலும் வெயில் மெல்ல ஏற ஆரம்பித்த பகல்களில் ஜன்னலருகே , மெல்ல வருடிய காற்றை அனுபவித்தவாறே பயணிப்பது அபூர்வ அனுபவம்.
அப்படித்தான் நேற்று லோவர் பரேல் ஸ்டேஷனிலிருந்து அந்தேரி நோக்கி நடுப்பகலில் பயணித்திருந்தேன். பாந்த்ரா நெருங்கும்போது, மிட்-டே பேப்பரில் வந்திருந்த விளம்பரம் ஈர்த்தது. பாந்த்ரா குர்லா வளாகத்தின் கண்காட்சித்திடலில் ”அன்றுமட்டும் அனுமதி இலவசம்” என அலறிய விளம்பரத்தில் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் ஐம்பது சதவீதம் தள்ளுபடி, இன்றே கடைசி” என்பதில் “அனுமதி இலவசம்” மட்டும் கவர்ந்தது. வழக்கம்போல , ஆப்பிள் மாக் கணனிகள் ஒரு லட்சத்தில் இருக்க, ஏஸர், ஆஸூஸ் நெட் புக், பலகைகள் இருவதாயிரத்தில் இருக்கும் எனத் தெரிந்தே இருந்தும், மாக்-கில் சற்றே கைவைத்துப் பார்க்க ஒரு அல்ப ஆசை. என் மகன் சொல்வதுபோல் “ என்றேனும் ஒரு நாள், நம்ம வீட்டிலும் மாக் இருக்கும்பா..ஆனா எந்த நாள்?” என்ற கேள்வியுடன் பாந்திராவில் இறங்கினேன்.
நான் எதிர்பார்த்தது போலவே இருந்தது. ஐ பேட்-இல் கை வைக்க ஐம்பது பேர் வரிசையில் நின்றிருந்தனர். ஒருத்தரும் வாங்கற மூஞ்சியாகத் தெரியவில்லை. நான் உள்பட. பாலிவுட் நடிகைகளைப்போல ஆப்பிள் பொருட்கள். எல்லாரும் வாயைப் பிளப்பார்கள். தொட்டுப்பார்க்க ஜொள்ளு விடுவார்கள். ’சரி நேரமாயிருச்சு’ என அடுத்த ரயில் ஏறிப் போய்க்கொண்டேயிருப்பார்கள்.
”எக்ஸ்யூஸ் மி” அழைத்த ப்ளூ ஜீன்ஸ் சேஸ்ல் பெண்ணிற்கு இருவது வயதிருக்கும். காலேஜ் கடைசி வருஷம் போலிருந்தாள். கல்லூரி மாணவ் மாணவியர்கள் இந்தமாதிரி கண்காட்சிகளில் , ஸ்டாலில் நிற்பதற்கும், ஆட்களை அழைப்பதற்கும், ஒரு நாளுக்கு 500-1000 ரூபாய் என பணி செய்வது மும்பையில் சகஜம். 
எக்ஸாம் வந்துருமே இப்போ? என்ற எனது அனாவசியக் கவலைகளை அவள் பொருட்படுத்தாமல் தொடர்ந்தாள்.” கம்ப்யூட்டர் பாக்கிறீங்களா? ரொம்ப வித்தியாசமான..”
“வேணாம்மா.தாங்க்ஸ்.” கம்ப்யூட்டர் ஒரு கம்ப்யூட்டர்.. அதுல என்ன வித்தியாசமா இருக்கப்போகுது? நான் பாக்கததா?
“இல்ல சார். ரீசைக்கிள் பண்ணின பொருட்கள்ல இருந்து தயாரிச்சது. விலை 4900 ரூபாய் மட்டுந்தான்”
சுவாரசியமானேன். ரீசைக்கிள்ட்... நிறைய கம்ப்யூட்டர்கள் ப்ளாக் மார்க்கெட்டில் அடிமட்ட விலையில் வருவதெல்லாம் இந்த மாதிரித்தான் என்றாலும், வெளிப்படையாச் சொல்ல ஒரு துணிச்சல் வேணும்.
ஸ்டாலில் பெரிய போர்டு. உடைஞ்சுபோன கம்ப்யூட்டர்களை குவிச்சுப் போட்ட இடங்களிலிருந்து, ராம், ஹார்ட் டிஸ்க், மதர்போர்ட் என எடுத்து, பிரித்து, புதிய சி.பி.யூ அசெம்பிள் பண்ணி அசத்தியிருக்கிறார்கள். பார்ப்பதற்கு 1995ல செஞ்ஜ  386/486 கம்ப்யூட்டர் போல இருந்தது. பெரிய மவுஸ்..ஜிகு ஜிகுவென சிகப்பாக எல்.இ.டி ஒளிர்ந்தபடி, ட்ராஃபிக் லைட் மாதிரி பிரகாசமாக.. எருமை மாடு சைஸ்ல சி.ஆர்.டி மானிட்டர். இன்னும் இருக்கா இதெல்லாம்?

எவன் வாங்குவான்?
“ ஸ்கூல், காலேஜ்ல நன்கொடையா நிறையப்பேர் கொடுக்கறாங்க சார். கிராமத்துல முனிசிபல் ஆஸ்பத்திரி. மகளிர் சுய வேலைக்குழு, லைப்ரரி..” 

ரொம்ப வருஷமாக் கேட்டுக்கொண்டிருக்கிற பாரிவள்ளல் ரேஞ்சுக்குக் கொடை குணம் . வீணாப்போன கம்ப்யூட்டரை வீட்டிலிருந்து தள்ளிவிடுவது பேரு நன்கொடையா? ரெண்டு நாள் புளித்த மோர்சாதத்தை  ”வேலைக்காரிக்குக் கொடுத்துட்டேன்” எனப் பெருமையடித்துக்கொண்ட அந்த காலத்துப் பெண்களின் பேச்சுக்கும் இதுக்கும் என்ன வித்தியாசம்?
“எவ்வளவு கரண்ட் எடுக்கும்?”
“சார்?” அவள், ஒல்லியாயிருந்த ஒரு மனிதரை அழைத்தாள். அவரைவிட ஒல்லியாக ஒரு சிகப்பு டை அணிந்திருந்தார்.  இன்னும் கொஞ்சம் ஒல்லியாயிருந்தால் அதன் பேர் பாவாடை நாடா.
“இந்த சி.ஆர்.டி மானிட்டர், சி.பி.யூ என்ன பவர் ரேட்டிங்க்? எழுவது வாட் இருக்குமா?”
 ஒல்லி  மேனேஜர் திணறினார்.
“ம்... தெரியல சார். இருக்கும்”
”கிராமத்துல கரண்ட் வர்றதே கொஞ்ச நேரம். அதுல இவ்வளவு கரண்ட் இழுத்துச்சுன்னா..”
“ரூரல் ஏரியால நல்லா போவுது சார்.   விவசாயத்துக்கு கரண்ட் இலவசம். ”
எவன் சொன்னான் இவர்களுக்கு?
கம்ப்யூட்டரின் செயல்திறன் ஆச்சரியப்படும் அளவு, நன்றாகவே இருந்தது. ஓப்பன் ஆஃபீஸ் மென்பொருள் , மராத்தி எழுத்துரு செயலி, லேன் கேபிள் வசதி- ப்ராட்பேண்ட் வசதிக்கு..போதுமே?
“வீட்டுல இருக்குங்க. வேணாம். தாங்க்ஸ்” நழுவினேன்.
ஒல்லி விடுவதாயில்லை.
“நன்கொடையாக் கொடுக்கலாம் சார். மூணு தவணைல பணம் கொடுத்தாப்போறும்.  உங்க பிறந்த நாள் சொல்லுங்க. உங்க பேர் பொறிச்சு , பன்வேல் பக்கம் ஒரு முதியோர் இல்லத்துக்கு அனுப்பிறலாம்”
மனிதர் ஒரு லெட்டர் பேட் எடுத்துக்கொண்டார்.
“ உங்க பேரு?”
நட்சத்திரம், கோத்திரம் மட்டும்தான் கேக்கவில்லை. அர்ச்சனை சீட்டு மாதிரி ஒரு பேப்பரைக் கையில் திணித்தார்.
“600 ரூவா மட்டுந்தான் அட்வான்ஸ்”
தொந்தி தள்ளின ஒரு குஜராத்தி மனிதர் ஸ்டாலுக்குள் நுழைந்தார். ப்ளூ ஜீன்ஸ் அவரை நோக்கித் தாவ, மேனஜரின் கவனம் என்னை விட்டு ஒரு வினாடி அகன்றது.
அது போதும் எனக்கு. அடுத்த கடைக்கு மெல்ல நழுவினேன்.
“வாங்க சார். புது விதமா மாங்கா ஊறுகாய்”