xmlns:fb="http://ogp.me/ns/fb#"> Ennangalsudha எண்ணங்கள் சுதா: December 2004

Sunday, December 19, 2004

TheruvilakkukaL

தெருவிளக்குகள்
-----------------------


முன்பெல்லாம் குழல்விளக்கு
இத்தெருவில்.
இறந்த பூச்சிகள் கரியாக
அடைத்துக்கிடக்க
பாதிக் குழல் காட்டியபடி
மழை முடிந்ததென
யாரும் கேட்காமலே
மங்கிய ஒளியில் மெளனமாய்
அறிவித்துக்கிடக்கும்.

மின்சாரம் பாய்ந்தும்
மூன்று மணிநேரமாய்
மினுமினுக்கி, இறுதியில்
யாரும் அறியா நடுநிசியில்
கசிந்த இருளில் ஒளிகரைத்து
இறந்துபோகும்.

உண்ணியரித்த
முதுகு தேய்த்து,
முகர்ந்த நாய்கள்
கால்தூக்கி உபாதைஇறக்கிப்
போன நசுங்கிய கம்பங்கள்
இறந்த விளக்கின் சுமையோடு
கழுத்து வளைந்து மெளனமாய்
தலைகுனிந்து நிற்கும் ..
எதிர்வீட்டுக் கிழவர் போலே.

இப்போதெல்லாம்
இங்கே,
சோடியம் வேப்பர் விளக்குகள்
ஒரே அலைநீள மஞ்சள் ஒளிபரப்பி
வெறியேறி ஒளிவெள்ளம் பாய்ச்சுகிறது
கண்கள் கூசிமளவிற்கு..
விறைத்த கம்பங்களோவெனில்
மதர்ப்பாய் நிமிர்கின்றன-
ஓய்யாரமாய் விளக்குகளை
கோணங்களில் தாங்கியவாறு.

அன்புடன்
ஸ்ரீமங்கை

Thursday, December 02, 2004

Anubhavam

அனுபவம்

மொட்டைப்பாறைக்குக் கீழ்
சுழித்தோடும் தாமிரபரணி.
தாவித்துழவத் துறுதுறுக்கும் மனம்.

"இங்கேதானே ஏழாம் வயதில்
இழுப்பில் தவங்கினாய்?"
பட்டறிவு போதகம்.

கர்ப்பிணி மனைவி
கட்டாமல் விட்ட ஆயுட்காப்பீட்டு சந்தா..
...............
என்றேனும் ஒருநாள்
என் அசட்டுத்தைரியம் மீண்டும் ஜெயிக்கும்.