xmlns:fb="http://ogp.me/ns/fb#"> Ennangalsudha எண்ணங்கள் சுதா: Advantages of having one leg

Saturday, February 12, 2005

Advantages of having one leg

Advantages of having one leg என G.K.Chesterton எழுதியதைப் படித்த ஞாபகம் இன்று வருகிறது. காலை நானும் உடைத்துக்கொண்டு பூரண படுக்கை ஓய்வில் பதினைந்து நாட்களுக்கு இன்று முதல் கிடக்கிறபடியால்.

அதிகாலை 4 மணிக்கு ரயிலிலிருந்து இறங்குபவர்கள் என்னைப்போல் தூங்கக்கூடாது. இல்லாவிட்டால் போரிவல்லி ஸ்டேஷன் வந்துவிட்டது என எவரோ கத்தியது கேட்டு நான் அடித்துப் பிடித்துக்கொண்டு இறங்க, பின்னால் இருந்த 100 கிலோ மனிதம் , என்னைத்தள்ள இப்படி இடது கால் வளையுமாறு விழுந்திருப்பேனா?
கணுக்கால் ஜிவ்வென வீங்க, எவரோ செய்த புண்ணியத்தில் இரு போர்ட்டர்கள் தூக்கிவந்து ஆட்டோ வில் ஏற்றி அனுப்பியது வரைதான் ஞாபகம் இருக்கிறது. வீட்டில் இறங்கியதும், பின்னர் மருத்துவமனையில் எக்ஸ் ரே எடுத்ததும், காலில் ப்ளாஸ்டர் கட்டுப் போட்டு," பதினைந்து நாட்களுக்கு அசையக்கூடாது" என்று அந்த டாக்டர் சொன்னதும் ஏதோ கிறக்கத்தில்தான் இன்னும் இருக்கிறது

திருத்தக்கன், போன் போட்டு " அதிசயமாகக் கிடைத்த லீவு. ஜமாயுங்கள்" என்றுசொன்னதும் chesterton தான் நினைவுக்கு வருகிறார்.

இத்தனை நாள் இந்த மின்விசிரியின் சப்தம் இப்படிக் கேட்டதில்லை. எலக்ட்ரீஷியனைக் கூப்பிடவேண்டும்
புலி நகக் கொன்றை -இன்னும் ஒரு தடவை படிக்கலாம். அப்படியே அந்த strong medicine இன்னொரு முறை புரட்டலாம்.
zen and art of motorcycle maintenance புத்தகம் எங்கோயோ காணாமல் போயிருக்கிறது. தேட எழுந்திருக்க முடியாது. இது எனது எரிச்சல். தேடச் சொல்கிறானே என என் மகனின் எரிச்சல்.
கவிதை என எதையாவது எழுதலாம்
இத்தனை நாள் தொடர்பற்றுப் போயிருந்த நண்பர்களைத் தேடிப்பிடித்து தொலைபேசியில் அரட்டையடிக்கலாம்.
பையனின் கணிதப் புத்தகத்தை இன்று தான் பார்க்கிறேன். மூன்றாம் வகுப்பில் நானெல்லாம் அன்று வாய்ப்பாடு மட்டும் சொல்லிக்கொண்டிருந்ததாக ஞாபகம். இவன் என்னடாவென்றால் தனிவட்டி, கூட்டுவட்டி என்கிறான்.
மதியம் வந்து கரையும் இந்தக் காக்கையை இதன் முன் கண்டதில்லை -(இத்தனை தைரியமாய் எனது சன்னலில் அமர்ந்து..)
தொலைக்காட்சியில் அப்படி என்னதான் சீரியல் காட்டுகிறார்கள் எனப் பார்த்தேன். சத்தியமாய் எனக்குப் புரிந்தவரை இப்படி ஆ-வென வாய் பிளந்து பார்க்க ஒன்றுமில்லை எனத்தான் படுகிறது.

அடிக்கடி வந்து இனிமே தொல்லை பண்ண சாத்தியக்கூறு இருப்பதால், நண்பர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
அன்புடன்
க.சுதாகர்.

No comments: