xmlns:fb="http://ogp.me/ns/fb#"> Ennangalsudha எண்ணங்கள் சுதா: Experiences- Naatupuram 2

Wednesday, February 16, 2005

Experiences- Naatupuram 2

நாட்டுப்புற அனுபவங்கள் -2

குஜராத்- மகாராஷ்ட்டிரா எல்லை
____________________________________

"இத்தோடு மூன்றாவது" எண்ணிக்கொண்டிருந்தேன். மூன்று வண்டிகள் எங்களைத் தாண்டிப் போய்விட்டன, நிற்காமலேயே. சாலஒயோரத்தில் ப்ளிங்க்கர்களை மினுக்கியபடி எங்கள் டாட்டா சுமோ நின்றுகொண்டிருக்க, ஓட்டுநர் , சக்கரத்தை மாற்றும்பணியில் மும்முரமாக இருந்தார். வியர்வை வெள்ளத்தில் அவர் முதுகெங்கும் நனைந்து, சட்டை கருத்திருக்க, சுவர்க்கோழிகளின் சப்தம் கேட்கத் தொடங்கியிருந்தது.
"இன்னும் எவ்வளவு நேரமாகும்ப்பா?" பதிலை எதிர்பார்த்துக் கேட்கப்படும் கேள்வியல்ல எனினும், கேட்கும் வழக்கத்தை நான் மீறவில்லை
"கொஞ்ச நேரம்தான் சார்". பதிலும், கேள்விக்குச் சரியாகவே வந்தது."கொஞ்ச நேரம்" என்பதை யார் வரையறுப்பது?
குஜராத் மஹாராஷ்ட்ட்ரா எல்லையில் நாசிக் போகும் மலைப் பாதையில் மாட்டிக்கொண்டிருந்தோம். மேற்கு மலைத்தொடரின் ஒரு பகுதியில், அத்துவானக் காட்டில் மாலை ஆறுமணிக்கு , சக்கரம் பழுதாகி நின்றிருக்க. என்னோடு , சைலேஷ் பட் என்ற நண்பனும் குளிரில் வெடவெடத்து நின்றிருந்தான். ஜனவரி குளிர் ஊசியாகக் குத்தத் தொடங்கியிருந்தது. மடமடவென இருட்டிக்கொண்டு வந்ததில், சாலை மங்கலாக, ஹெட்லைட் வெளிச்சத்தில் , முன்னே பத்தடி தூரமே தெரிந்தது. அடர்பனிப் புகையில் வண்டியின் கதவுகளில் ஈரப்பதம் மண்டியிருந்தது.
" சுதாகர்பாய். இங்கே ராத்திரி சிறுத்தைகள் நடமாட்டம் உண்டு. வாங்க, சீக்கிரம் எதாவது கிராமம் தெரியுதான்னு பாத்துப் போயிடலாம்." சைலேஷ் மெதுவாகப் படபடத்தான். பயத்தைக் காட்டிக்கொள்ள விரும்பவில்லை போலும்
" வண்டிக்குள்ளேயே இருப்பமே? எதுக்கு வீணா அலைஞ்சுகிட்டு?" என்றேன்.
" இப்பவே பனியைப் பாருங்க. பத்தடி முன்னால என்ன இருக்குன்னு தெரியலை. ராத்திரி, லாரி கண்ணு மண்ணு தெரியாம வருவான். அடிச்சுட்டுப் போனான்னா, நாம சட்னிதான்"
எனக்கு மெல்ல சூழ்நிலையின் தீவிரம் உரைத்தது. யோசிக்க நேரமில்லை.
"சுதாகர்பாய். இங்கேயிருந்து மூணு கிலோமீட்டர் தூரத்துல ஒரு கோயில் இருக்கு.ன்னு ஒரு போர்டு பார்த்தேன். அங்க போயிடலாம். யாராச்சும் பக்கத்துல இருப்பாங்க. டிரைவர், நீங்களும் வாங்க. கண்ணாடியெல்லாம் ஏத்திவிட்டுட்டு.".சைலேஷ் எனது பதிலைக் கேட்காமலேயே, அவனது தோள்பையைத் தூக்கிக்கொண்டான்.
தோளில் லாப்டாப்பும், பயணப்பையுமாய் அவனைத் தொடர்ந்தேன்
ஒரு மணிநேர நடையின் பின், மினுக் மினுக் என ஒளிர்ந்த விளக்கைப் பார்த்தோம். மெல்ல அதை நோக்கி நடந்தோம்
" கோன் ஹை?"
மிக அடர்வான குரலில் அதிர்ந்தாலும், தைரியமாய் சைலேஷ் கேட்ட திசையை நோக்கிக் கத்தினான்.
" வெளியாள். வண்டி நின்றுவிட்டது. உதவி தேவை"
மரங்களின் சலசலப்பில் இரு மனிதர்கள் வெளிவந்தனர். மிக ஒல்லியான தேகம். சுருக்கங்களுடன் கூடிய தோல். வேட்டிபோல எதோவொன்று இடுப்பில். மேலே, கனமான விரிப்புப் பாய் போல ஒன்றைச் சுற்றியிருந்தனர்.
"மேலே போகாதீங்க. திரும்பிப் போங்க"
நின்றோம். "ஏன் போகக்கூடாது? அந்த கிராமத்துக்குப் போயிட்டு, விடிஞ்சதும் வண்டியைச் சரிபண்ணிக்கொண்டு போயிடறோம்". எனது குரல் எனக்கே அந்நியமாய்க் கேட்டது.
"திரும்பவும் சொல்லறேன். அங்கே போகாதீங்க"
"ஏன்?" டிரைவர் கோபமாய்க் கத்தினார். மேல்மூச்சு வாங்க , மலையில் ஏறியதில் மூச்சு இறைத்தது.
"அங்கே கொலை நடந்திருக்கு."
உறைந்தோம். என்ன இழவு இது? எங்கே வந்து மாட்டிக்கொண்டிருக்கிறோம். கீழே இறங்கிப் போவது சுலபமில்லை. ஒரே இருட்டு. வழி தெரியாது.
எங்கள் திண்டாட்டத்தைப் பார்த்து அவர்களுக்கே இரக்கம் வந்திருக்கவேண்டும்."எங்களோடு வாங்க"
வழியில்லாமல், பின் தொடர்ந்தோம். யார் இவர்கள்? இவர்கள் சொன்னதுக்காக நாம் ஏன் பின்னால போகவேண்டும்? ஒரு நினைவும் அப்போது வரவில்லை. குளிரும், களைப்பும் அப்படி.

மலையின் ஒரு சரிவில் இறங்கினர். சிறிய மண்டபம் போல இருந்த ஒரு கல்கட்டடத்தில் அவர்களூடன் நுழைந்தோம். வெளவால்களின் நாற்றம்..குமட்டியது.
" காலேல, இந்த வழியா இறங்கிப் போங்க. அரைமணிநேரத்தில நாசிக் பாதையில் இருக்கும் பெட்ட்ரோல் பம்ப் வரும். அதுக்குப் பக்கத்துல டயர் பங்க்சர் ஒட்டற இடம் இருக்கு. வாபி போற லாரிலே அவனைக் கூட்டிட்டுப் போய் வண்டியை எடுத்துக்க" சொன்னவர்கள் மண்டப ஓரமாய் குத்திட்டு அமர்ந்து சிகரெட் பிடிக்கத் தொடங்கினர். கனத்த மொளனம் சூழ்ந்தது. ஒருவர் கூடப் பேசவில்லை.

சைலேஷ் மெதுவாக அவர்களிடம் பேச்சுக்கொடுத்தான்.
"நீங்க இங்கேயேதான் இருக்கீங்களா?"
பதில் இல்லை.
என்னைப் பார்த்து சைலேஷ் தர்மசங்கடமாய் சிரித்தான். நான் மொளனித்தேன். ஐந்து நிமிடங்கள் அமைதியாகச் சென்றன.

ஒருவன் மெல்லத் திரும்பினான். "எங்கே போய்க்கொண்டிருந்தீர்கள்?"
"நாசிக்.. அப்படியே பக்கத்தில் சில உற்பத்திசாலைகளுக்கும் செல்லவேண்டியிருந்தது" சைலேஷ் வாய்ப்பை நழுவவிடவில்லை.
அவன் அமைதியானான்.
திடீரென மற்றவன் எழுந்தான்." நீ எந்த ஊர்க்காரன்?" என்னைக் கேட்டவிதத்தில் வியர்த்தேன்.
"ம...மதராஸி நான்" சொல்லி முடிக்குமுன்னே அவன் என் முன் குனிந்தான்.
"பிழைத்தாய். உன் உடல் நிறத்தைப் பார்த்ததும் நீ இந்த ஊர்க்காரனோ என எண்ணிவீட்டேன்"
சொன்னவன் மெல்லப் பின் நகர்ந்தான். மற்றவன் அவன் தோள் மீது கைவைத்துத் தள்ளினான்.
"விடு. எவன் போகவேண்டுமோ அவன் போய்விட்டான். இனியென்ன?"
என் உடல் ஆடியது. உதடுகள் வறண்டு உலர்ந்தன. சைலேஷ் என் பின்னால் ஒளிந்த்கொண்டான்.

மெதுவாய் ஒருவன் சொல்லத் தொடங்க, மற்றவன் மல்லாந்து படுத்தான்.
" நாங்கள் மலைசாதிக்காரர்கள். இந்த இடம் எங்களுக்குச் சொந்தம். சில #### ஜாதி நாய்கள், பைசா வாங்கிக்கொண்டு பட்டா எழுதிக்கொடுத்து.. இன்று ஒன்றூமில்லாமல் இருக்கிறோம். "
சைலேஷ் எதையோ சொல்லத்தொடங்க, நான் அவன் கையை அழுத்தினேன்.
"ஒரு வாரம் முன்னால் இதோ கிடக்கிறானே, அவனது தங்கையை, ரோடு போடும் பணியில் வேலை செய்து கொண்டிருந்தபோது, சூப்பர்வைசர் சீரழித்துவிட்டான். ஒரு தடயமும் இல்லாமல் அவ்ளை மிரட்டி ஓரிடத்தில் அடைத்து வைத்து, பலரும்....."
நாங்கள் உறைந்திருந்தோம்
"போலீஸ் அவனுக்குத் துணை. ஒரு ஆதாரமும் இல்லாமல் நாங்கள் அலைந்தோம். ஆதாரம் கிடைத்தது போனவாரம்.. அந்தக் காட்டுக் கோவிலில். "
"மெதுவாக அவனைப் பின் தொடர்ந்தோம். இன்று அவளைப் பார்க்க அவன் வந்தபோது , பழி தீர்த்தோம்."
"அதுதான் அங்கே போகவேண்டாம் எனச் சொன்னேன். புரிந்ததா?"
எங்களைப்பார்க்காமலேயே சொன்னவனும் நீட்டி நிமிர்ந்தான்.
மெதுவாக அவன் பாடத்தொடங்கினான்.
" ஊருக்குக் காவல்
அந்தக் கோயில்.
கோயிலுக்குக் காவல்
உறூமும் வேங்கைகள்.

யாருக்காய் இக்காவல்
நரிகள் கோயிலை
இறைச்சி சேமிக்கும்
கிடங்காக்குகையில்?

மரங்களில் பழங்கள்
பத்திரமாய் இல்லாதிருக்க
மந்திகளுக்காய் இக்காவல்.

திருட்டின்றி, காவலின்றி
மலையின் நீதி
என்று வரும் எங்களூக்கு
பருவ மழைபோலப்பொழிந்து?



உறக்கம் வரவில்லையெனினும், களைப்பு, கால் வலி என அயர்வு எங்களைத் தூக்கியது. செவ்வான உதயத்தில் இருவரையும் காணவில்லை. மெல்ல நாசிக் சாலையில் இறங்கினோம். ஓட்டுநர் , பங்ச்சர் ஒட்டும் ஆளிடம் பேரம் பேசிக்கொண்டிருக்க, புகை கக்கி வந்த ஒரு லாரியில் நானும் சைலேஷும் ஏறிக்கொண்டபின், மலை மேல் ஒரு முறை நோக்கினேன். பெரும் தேவதாரு மரங்களினூடே , சில குரங்குகள் தாவுவது , நிழலாகத் தெரிந்தது.

(அன்று சுத்தமாய் எனக்குப் புரியவில்லை. சைலேஷ் மற்றும் ஓட்டுநர் புரிந்ததாய்ச் சொன்னதைவைத்து இதனை வடிவமைத்திருக்கிறேன்.)


க.சுதாகர்

No comments: